வரும் 2050 ஆண்டு ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறும் என்று லான்செட் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. நாடுகளில் வேலை செய்யக் கூடிய வயதில் உள்ளவர்களின் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு ஜிடிபி எவ்வாறு இருக்கும் என்றும் இவ்வாறு மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றத்தால் பொருளாதாரம் மற்றும் புவி-அரசியலில் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்தும் இந்த ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு உலகின் ஏழாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருந்த போது அதன் நிலை எப்படி இருந்தது என்பதை அடிப்படையாக வைத்து 2030ஆம் ஆண்டில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானைத் தொடர்ந்து நான்காவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை எட்டும் என்றும், பின்னர் 2050ஆம் ஆண்டு வாக்கில் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தைப் பிடிப்பதோடு 2100ஆம் ஆண்டு வரை தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றும் ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் பதிப்பிக்கப்பட்ட இந்த ஆய்வு 20 முதல் 67 வயது வரையிலான வேலை செய்யக்கூடிய திறன் உள்ளவர்கள் 2017ஆம் ஆண்டு உலகின் முதல் பத்து பெரிய நாடுகளில் எந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து எதிர்காலத்தில் மக்கள்தொகை எவ்வாறு மாறுபடக் கூடும்‌ என்று மதிப்பிட்டுள்ளது.

சீனாவிலும் இந்தியாவிலும் வேலை செய்யக் கூடியவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று கணக்கிடப்படுவதாகவும் 2100ஆம் ஆண்டுவாக்கில் கூட இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவு வேலை செய்யக் கூடியவர்களின் மக்கள்தொகை இருக்கும் என்றும் இந்தியாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் நைஜீரியா சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருக்கும் என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு வாக்கில் சீனா ஜிடிபியில் முதலிடத்தை பிடிக்கும் என்றும் எனினும் 2098 ஆம் ஆண்டில் அமெரிக்கா மீண்டும் முதல் இடத்தை பிடித்து விடும் என்றும் மக்கள்தொகையில் ஏற்படும் சரிவு இதற்கு காரணமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜப்பானில் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட்டாலும் 2100 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார ரீதியாக நான்காவது பெரிய நாடாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.