ஆடித் திருவாதிரை..
05.08.2021.
இராஜேந்திரச் சோழன் பிறந்தநாள்..
இராஜேந்திரனின் போர் வெற்றிகளும், கண்ட களங்களும் சற்று அதிகம்தான்.. அனைத்திற்கும் சிகரமாய் ஆய்வாளார்களால் கொண்டாடப்படுவது கங்கை வெற்றியை.. அப்படி என்ன அதில் சிறப்பு..?
அரசர்கள் போர்களில் வெற்றிபெறுவதும், அவ்விடங்களில் வெற்றித்தூண் அதாவது ஜயஸ்தம்பம் நடுவதும் வழக்கமான ஒன்றுதான்.
இந்த தூண் கல்லால் செதுக்கப்பட்ட ஒன்று..
தனது வெற்றியை பறைசாற்றும் ஒரு அடையாளம்..
இராஜேந்திரனும் தனது கங்கை வெற்றியை கொண்டாட ஒரு தூண் நட்டார்..
கல் தூண் அல்ல.
நீர்த்தூண்.. ஜலஸ்தம்பம்.. தண்ணீர் மயமான தூண்..
கங்கை நீரை.. சோழபுர ஏரியான சோழகங்த்தில்
கொட்டி ஒரு நீர்த்தூண் நட்டு, கங்கை கொண்ட சோழன்
என்னும் அழியா புகழ் பெற்றார்…
இந்நிகழ்வுகளை அப்படியே திருவலங்காடு செப்பேடு மற்றும் இராஜேந்திரனது மெய்கீர்த்தி சாசனவரிகள்
எடுத்துரைக்கிறது..
புதிதாக கட்டமைக்கப்பட்ட சோழபுரத்தை கங்கை நீரால் சிறப்பிக்க முடிவு செய்கிறார். கங்கைநீரை கொண்டு வருமாறு தம் படைத்தலைவனுக்கு ஆணையிடுகிறார்.
அப்படைத் தலைவனும் படையுடன் சென்று வடதேச
மன்னர்களை வென்று கங்கை நீரை கொண்டு வருகிறார்.. அப்படைத்தலைவனை வரவேற்ற இராஜேந்திரன், தான் அமைத்த சோழகங்கம் ஏரியில் நீர்த்தூண் அமைக்கிறார்..
உலகத்தமிழர்களின் பெருமைமிகு இந்நிகழ்வை,
திருவலங்காடு செப்பேட்டின்
109 – 124 செய்யுள் கூறுகிறது ..
செய்யுள் 109 – 124 வரை உள்ள வடமொழிப் பகுதியின் தமிழாக்கம்..
செப்பேட்டின் 109 வது செய்யுள்…
“பகீரதனின் தவத்தின் வலிமையால் பூமிக்கு வந்த கங்கை நீரை.. தன் தோளின் வலிமையால் அந்த கங்கை நீரைக்கொணர்ந்து தன் நாட்டை புனிதமாக்க முயன்றான்
இராஜேந்திரன்”
செய்யுள் 110..
“கங்கை நதிக்கரையில் வாழும் பகையரசர்களை வெல்வதற்கு, வீரத்தில் சிறந்தவனும், பலமான படைகளை உடையவனும், அறமறிந்தோரில் முதல்வனுமான தன் படைத்தலைவனுக்கு ஆணையிட்டான்.
செய்யுள் 111..
“பனிமலையிருந்து வரும் கங்கைநீரைப் போல்..
கல கல என்னும் ஒலி எழுப்பியவாறு
அப்படைத்தலைவனின் குதிரைகள் சென்றது..”
செய்யுள் 112…
யானைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பாலத்தால் இராஜேந்திரனின்
படைகள் கங்கை நதியை கடந்தது.
செய்யுள் 113..
“யானைகள், குதிரைகள், வீரர்கள், இவர்கள் எழுப்பிய
புழுதி பறந்தவாறு விக்ரமச்சோழனின் ( இராஜேந்திரன்)
படைகள் எதிரி மணடலத்தில் நுழைந்தன.”
செய்யுள் 114..
இராஜேந்திரனின்
படைகள், இந்திரரதனை முதலில் வென்று சந்திரகுலத்தின் ஆபரணமாய் திகழும் இடத்தை கைப்பற்றியது”
செய்யுள் 115
“நடைபெற்ற போரில் அம்புகளால் துளைக்கப்பட்ட,
தண்ட நுனியினை உடைய வெண் கொற்றக்கொடை
கீழே விழுந்தது. இது சந்திரனின் பிம்பமே கீழே விழுந்தது போல் இருந்தது “
செய்யுள் .. 116
சிபிகுல அரசனின் ( இராஜேந்திரன்) படைத்தலைவன்
இரணசூரனை வென்று, தர்மபாலனின் நாட்டில் நுழைந்தான்.பிறகு தேவநதியான கங்கை நோக்கிச் சென்றான்.
செய்யுள் 117…
“அந்த நதிக்கரையில் இருக்கும் அரசர்களை படைத்தலைவன் வென்றான். அவர்களைக் கொண்டு
அந்த புனித நீரை தன் தலைவன்
மதுராந்தகனுக்காக ( இராஜேந்திரன்) கொண்டு வந்தான்.”
செய்யுள் 118..
“கோதாவரி நதிக்கரையை இராஜேந்திர சோழன் அடைகிறார். சந்தனப்பூச்சுகள் கொண்டு நதிக்கரையில்
நீராடி முடிக்கிறார். வெற்றியுடன் வரும் தன் படைத்
தலைவனை வரவேற்கிறார்.”
செய்யுள் 119
“அவனுடைய வேகமான அந்தப்படை எதிரி அரசனை வென்று, பெரும் புகழ் மற்றும் இரத்தினங்கள் இவற்றுடன் கங்கை நீரையும் தன் தலைவனுக்காக கொண்டு வந்தது.
செய்யுள்
தன்னுடைய தேசத்தில் சோழ கங்கம் என்ற பெயருடையதும், கங்கை நீரால் ஆனதுமான ஜய ஸ்தம்பம் ஒன்றை நிறுவினான்..
( நீர் மயமான வெற்றித்தூண்)
இனி….
இராஜேந்திரனின் மெய்கீர்த்தியில் காணப்படும் கங்கைப்படையெடுப்பில் அவர் வென்ற நாடுகள்..
1. சக்கரக்கோட்டம்.
இன்றைய சடடீஸ்கர் மாநிலத்தில் உள்ள சித்திரக்கூடா என்னும் நகரம்..
2.மதுரை மண்டலம்.
இன்றைய பீகார் மாநிலத்தில் உள்ள மதுரா.
3.நாமனைக்கோனை.
இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி என்று யூகிக்கப்படுகிறது.
4.பஞ்சப்பள்ளி.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் அருகே உள்ள பஞ்சப்பள்ளி.
5.மாசுனிதேசம்.
சட்டீஸ்கர் மாநிலப்பகுதியாக இருக்கலாம்.
6. ஆதிநகர்.
ஒடிசா மாநிலத்தின் கான்ஜம் மாவட்டப்பகுதி.
7.ஒட்டவிஷயம்.
இன்றை ஒடிசா மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்குப்பகுதி.
8.கோசலைநாடு.
இன்றைய ஜார்கண்ட் மாநிலம்.
9.தண்டபுத்தி.
மேற்குவங்காளத்தின் மேற்குப்பகுதி.
10. தக்கணலாடம்.
இன்றைய பீகாரின் ஒரு பகுதி.
11.வங்காளதேசம்.
இன்றைய அஸ்ஸாம் , பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதி..
மேற்கண்ட நாடுகளை இராஜேந்திரன் தலமையிலான சோழர் படை வென்றுள்ளாது..
இப்படையெடுப்பில் சோழர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக அந்தந்த நாட்டின் கலைச் செல்வங்களை வெற்றிச் சின்னமாக தமிழகம் கொண்டுவந்தனர்..
அந்நாடுகளில் சோழர்களது சாசனங்களும் பொறிக்கப்பட்டன.
ஒட்டரதேசம் என்று சாசனங்களில் குறிப்பிடப்படும் இன்றைய ஒடிசா மாநிலத்தில் கஜபதி மாவட்டத்தில் மகேந்திரகிரி மலைச்சிகரம் ஒன்றில் மூன்று கற்கோவில்கள் உள்ளன. தர்மர் கோவில், பீமன் கோவில், குந்திகோவில் என்று அழைக்கப்படுகிறது.
தர்மர் கோவிலின் வாயில் நிலைப்படியில் ஒரு கல்வெட்டுப்பொறிப்பு உள்ளது. வடமொழியில் அமைந்த இக்கல்வெட்டின் தமிழாக்கம்…
” இராஜேதிரன் தனது தோள் வலிமையால் விமலாதித்யனை வென்று மலை மிகுந்த நாடுகளையும் மற்ற நாடுகளையும் கைப்பற்றி கலிங்கபதி போன்றோரை அடக்கி மகேந்திரமலை உச்சியில் விஜயஸ்தம்பத்தை நட்டான்.”
இக்கல்வெட்டுப் பொறிப்பின் கீழே சோழர் கால இலச்சினையும் கோட்டோவியமாக உள்ளது. அமர்ந்த புலியின் முன்பாக கயல்கள்..
தர்மர் கோவிலுக்கு அருகே இருக்கும் குந்தி கோவிலில் மூன்று கல்வெட்டுப் பொறிப்புகள் உள்ளன..
முதல் கல்வெட்டு.
மகேந்திரகிரி மலை உச்சியில் சோழர்கள் விஜயஸ்தம்பம் நட்டதுப் பற்றி பதிவு செய்கிறது.
இரண்டாவது கல்வெட்டு..
இராஜேந்திரனின் படைத்தளபதியான …
இராஜேந்திர சோழபல்லவரையன் என்னும் ராஜராஜ மராயனுக்கு இக்கோவிலில் விட்டி வாரண மல்லன் என்ற பட்டத்தை அளித்து ( எதிரிகளின் யானைப்படையை வென்ற தலைவன்) வீர அங்குசம் ஒன்றை வழங்கி சிறப்பித்துள்ளார் சோழப்பேரரசர் இராஜேந்திரன்.
மூன்றாம் கல்வெட்டு..
இப்பகுதியை ஆண்ட விமலாதித்தனை குறிப்பிடும் துண்டு கல்வெட்டு ஆகும்..
வீர அங்குசம் பெற்ற
இராஜேந்திர சோழ பல்லவரையனான இராஜராஜராஜன் மராயன் என்பவரே கங்கைபடையெடுப்பின் சோழர் படைத்தளபதி ஆவார்..
இராஜேந்திரனின் மெய்கீர்த்தி சாசனத்தில்.. கங்கைநீரை எடுத்த இடம்பற்றி கூறுகையில்..
“நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும் “
நெடுங்கடல் போல் பரந்து நிற்கும் உத்திரலாடம் என்னும் இடத்தில் நறுமணமிக்க மலர்களையுடைய தூய்மையான கங்கை நீரை சோழர் படை எடுத்தது.. இப்பகுதியை ஆண்ட மகிபாலனை சோழர்கள் வென்றார்கள்..
கங்கையில் நீர் எடுத்து வரும் சோழர்படையை இராஜேந்திரன் கோதாவரி நதிக்கரையில் வரவேற்றார்.
கங்கை நீர் எடுத்த சோழர்படைக்கு தலைமையேற்றத் தளபதியின் பெயர்..
விக்கிரமச் சோழ சோழியவரையனாகிய அரையன் ராசராசன்..
இவரின் பெயரைக் கேட்டவுடன் எதிரி அரசன் ஒருவர் ஓடி ஒளிந்து கொண்டாராம்.
கல்வெட்டுச் செய்தி.
கங்கை நீருடன் சோழர்படை தாயகம் திரும்பியது. கங்கைநீரால் சோழபுரம் கோவில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
சோழகங்கம் என்னும் ஏரியும் வெட்டி அதில் கங்கைநீரை கலந்தனர்..
இராஜேந்திரனின் கங்கைவெற்றியை பறைசாற்றும்
கல்வெட்டுகள்..
கும்பகோணம் திரிலோக்கியில்…
( a.r.e.1932 para 13)
“இராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருகின்ற இடத்து திருவடி தொழுது..”
என்ற கல்வெட்டு பதிவு செய்கிறது.
எண்ணாயிரம் என்ற ஊரில் காணப்படும்
கல்வெட்டில்..
( A.r.e. 1931 -32 part 2 para 3 )
உடையார் ஸ்ரீஇராஜேந்திரசோழதேவர்
உத்ரபாதத்தில் பூபதியாரை ஜயித்தருளி
யுத்தோத்சவ விபவத்தால் கங்காப்பரிகிரகம் பண்ணி
யருளின கங்கை கொண்ட சோழனென்னும்
திருநாமத்தால்….”
உத்ரபாதம் என்னும் உத்திரலாடத்தில் கங்கை அரசர்களை வென்று கங்கை நீரை கொண்டு வந்து கங்கை கொண்ட சோழன் என்னும் பெயர் பெற்ற உடையார் இராஜேந்திர சோழதேவர்..
ஒரு நீண்ட பயணம்..
இந்தியாவின் வடபகுதி முழுவதும் சோழர்களின் இராஜாங்கம்..
ஒரு ஒற்றைச் சொல்…
தமிழர்களின் வீரத்தையும் தீரத்தையும் பராக்கிரமத்தையும் பறைசாற்றிய அந்த ஒரு சொல்…
“இராஜேந்திரச் சோழன்”
அன்புடன்..
மா.மாரிராஜன்.
(Reference –
சோழர் செப்பேடுகள்..
முனைவர்
க. சங்கரநாரயணன் ..
இராஜேந்திரச் சோழன்.
குடவாயில் பாலசுப்ரமணியன்.
S.i.i.vol 3.
Page 424.
புகைப்படம்..
முனைவர் சிவராமகிருஷ்ணன்.
திருச்சி பார்த்தி)
DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.