பூஜ்ஜியம் பழங்கால இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தியர்கள் பூஜ்ஜியத்துக்கு என்று ஒரு வடிவத்தைப் பயன்படுத்தியதும், அதை எண்களின் மதிப்புகளைக் குறிப்பிடப் பயன்படுத்தியதையும் பற்றி பலருக்கும்‌ தெரியாது.

முதலில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலில் அமைந்துள்ள 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் பூஜ்ஜியத்தைக் குறிப்பிட ‘.’, அதாவது புள்ளியைப் பயன்படுத்தியது தான் உலகத்திலேயே பழமையானது என்று கருதப்பட்டது.

ஆனால் 1881ல் தற்போதைய பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள பக்ஷாலி என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏடுகளில் இருந்து, பூஜ்ஜியத்தைக் குறிப்பிட புள்ளியை 3வது நூற்றாண்டில் இருந்தே பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

கிட்டத்தட்ட 70 சுவடுகளைக் கொண்டுள்ள பக்ஷாலி ஏடுகள் 3ஆம் நூற்றாண்டு முதல் 7ஆம் நூற்றாண்டு வரையிலான வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு இருக்கக் கூடும் என்று கார்பன் டேட்டிங் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

காஷ்மீரிகளின் சாரதா எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்த சுவடுகள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் A.F.Rudolph Hoernlé என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டன. இவர் ஒரு ஜெர்மன் மிஷனரி தம்பதியரின் மகன்.

இவர் மொழிபெயர்ப்பதற்காக எடுத்துச் சென்ற பக்ஷாலி ஏடுகள் இன்று வரை இங்கிலாந்தில் தான் உள்ளன. இவற்றை இந்தியாவிற்கு திருப்பி அளிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? எண்கணிதம் (arithmetic), இயற்கணிதம் (algebra), வடிவியல் (geometry) உள்ளிட்ட கணிதப் பிரிவுகளில் அனைத்து வகையான எண்களையும் பயன்படுத்தி இந்த சுவடுகளில் விதிகள், அவற்றுக்கான உதாரணங்கள் மற்றும் விளக்கங்கள் என்று விவரமாக விளக்கப்பட்டுள்ளன.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் போட்லியன்(Bodleian) நூலகத்தில் இருக்கும் இந்த சுவடுகளை இந்தியாவிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கணித ஆராய்ச்சியாளர் ஜோனாதன் கிராப்ட்ரீ ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.

இவர் பக்ஷாலி ஏடுகளை ஆய்வு செய்த மிஷனரி A.F.Rudolph Hoernlé அதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு வழங்கி விட்டதாகவும், அது இந்தியர்களுக்கே சொந்தமானது என்பதால் இந்திய அரசிடம் திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

இந்திய கணித முறையின் மீது ஆர்வம் கொண்ட ஜோனாதான் அது குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதோடு இந்திய கணித முறையே கணிதம் கற்பிக்க சிறந்த வழி என்று கூறுகிறார்.

இந்தியர்கள் மட்டுமே பூஜ்ஜியத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அதன் மதிப்பு குறித்தும் தெளிவாக அறிந்தவர்கள் என்று கூறும் இவர், மேற்கத்திய கணிதவியல் ஆய்வாளர்கள் இந்தியாவின் பழமையான சுவடுகளையும், புத்தகங்களையும் திருடி அதிலிருந்து கணிதம் கற்க முயன்ற போது அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கணிதத்தை கடினமாக்கி விட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவிக்கிறார்.

இந்திய பள்ளிக் குழந்தைகளுக்கு பாரதிய கணித முறையைப் பயன்படுத்தி கணிதம் கற்பிக்க ஆவண செய்ய வேண்டும் என்று ஜோனாதன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. பக்ஷாலி ஏடுகளின் காலம் 3ஆம் நூற்றாண்டாக இருக்கக் கூடும் என்று கார்பன் டேட்டிங் முறையில் ஆக்ஸ்போர்டு பல்கலையின் நூலகம் ஆய்வு செய்து முடிவுக்கு வந்திருக்கிறது.

எனினும் அதற்கும் முன்பே பூஜ்ஜியம் கணிதத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கக் கூடும் என்றும், பக்ஷாலி ஏடுகள் முன்னர் பயன்படுத்தப்பட்ட கணிதப் பாடங்களின் பிரதியாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இத்தகைய பழமையும் புனிதமும் வாய்ந்த கல்விப் பொக்கிஷம் இந்தியர்களை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களின் கையில் இருக்கக் கூடாது என்று ஜோனாதன் கிராப்ட்ரீ இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்திய அரசு இது போன்று காலனி ஆதிக்கத்தின் போது கொள்ளையடிக்கப்பட்ட கலை மற்றும் கல்வி பொக்கிஷங்களை மீட்பதில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.