அது 17ம் நூற்றாண்டு, வேலுநாச்சியார் வீழ்த்தபட்டு மருது சகோதரர்கள் சிவகங்கை சீமையினை ஆண்டு கொண்டிருந்த காலம், ஆற்காடு நவாபின் சார்பாக வெள்ளையர்கள் தமிழகமெங்கும் வரிவிதித்த காலம்

அப்பொழுது இராமநாதபுர சேது மன்னர்களின் வரிசையில் அந்த மன்னர் பதவிக்கு வந்தார் அவர் பெயர் முத்துராமலிங்க சேதுபதி

சேதுபதி வம்சம் என்பது பாண்டிய சீமையில் தனித்து நின்ற வம்சம், சேது பூமி எனும் அந்த ராமநாதபுர வம்சத்துக்கு தனிபெரும் கவுரவமும் வரலாறும் உண்டு, கச்சதீவு அவர்கள் சொத்தாகவே இருந்தது, கிழக்கே குவிக்கபடும் முத்துக்களும் கடல்வழி வாணிபமும் வரியும் வைகையின் நீர்வளமும் அவர்களை செழிப்பாக வைத்திருந்தது

ஒரு கட்டத்தில் அவரையும் வெள்ளையன் துணையோடு அடக்கி கப்பம் வசூத்தான் ஆற்காடு நவாப், வெறுவழியின்றி அதை ஏற்றும் கொண்டார், வெள்ளையனும் மிக தந்திரமாக தன் தளபதி ஒருவனை அவரை கண்காணிக்க அவர் அருகே அமர்த்தியிருந்தான் அவன் பெயர் மார்ட்டின்ஸ்

சேதுபதி அன்று கப்பம் கட்ட காரணம் அந்த சேதுபூமி இஸ்லாமிய மயமாகிகொண்டிருந்தது, ஹிஜிர் காலண்டர் ஆர்காடு இஸ்லாமிய பணம் என அது வேகமாக இஸ்லாமியம் ஆயிற்று

மன்னர் அதை தந்திரமாக தடுக்க கப்பம் கட்டி இந்து பூமியாக மாற்றி கொண்டார்

சேதுபதி மன்னரின் முன்னோர் செய்த புண்ணியத்தில் அவருக்கொரு திவான் கிடைத்தார் அவர் பெயர் முத்திருளப்ப‌ பிள்ளை.

அவர் திருநெல்வேலி பகுதியின் ஏழை பிள்ளை, ராமநாதபுரம் பக்கம் உச்சிநத்தம் எனும் ஊரில் ரெட்டியாரிடம் கணக்குபிள்ளையாக சேர்ந்தவர். அபாரமான திறமைசாலி, வருமானம் பெருக்கும் அனைத்து வழிகளும் அறிந்த நிர்வாகி, பண்ணையாரான ரெட்டியிடம் இருந்த அவரின் திறமை அறிந்த சேதுபதி மன்னன் முத்துராமலிங்கம் அவரை தன் திவான் ஆக்கினார்

திருமலை நாயக்கனுக்கு கிடைத்த வடமலையான் பிள்ளை போல சேதுபதிக்கு முத்திருளப்ப பிள்ளை கிடைத்தார்

அவர் பெயர் முத்தருளப்ப பிள்ளை என்பதும் பின் முத்திருளப்ப பிள்ளை என்றாயிற்று என்கின்றது சில ஆய்வு

திவான் ஆனபின் முத்திருளப்ப பிள்ளை அசத்தினார், மிக சரியான சுங்க சாவடி வசூல், கிராமம் கிராமாக ஜாரி மகமை எனும் வரி வசூல், வணிக பொருள் வசூல், டச்சுக்காரரிடம் இருந்து வரி என மிக சீரான முறையில் செல்வம் குவித்தார்

இந்த மகமை வசூல் என்பது கோவில்கள் திருபணிக்கானது, இதனால் இராமேஸ்வரம் திருக்கோயிலின் 3வது பிரகாரம் சிறப்பாய் முடிந்தது அந்தத் திருப்பணியில் ஈடுபட்டதற்காக, அவரது திருஉருவத்தை கீழக்கோபுர வாசலில் நிறுவியுள்ளதை இன்னும் காணலாம்

அப்படியே சேது மன்னர்களின் குடும்ப கோவிலான திருமருதூர் என்ற‌ நயினார் கோவில் ஆலயத்தையும் திருப்பணி செய்வதற்குச் சேதுமன்னர் இவரை நியமித்திருந்தார் என்பதை அங்குள்ள கல்வெட்டு சொல்கின்றது

இந்த திவான் முத்திருப்ப பிள்ளைதான் காவேரிபோல் வைகையினை வற்றாமல் ஓடும் பெரும் நதியாக மாற்ற எண்ணினார், வரலாற்றில் வைகை என்பது மிக சீராக பயன்பட்ட நதி, அதன் வரைபடத்தை பார்த்தாலே உங்களுக்கு விளங்கும்

ஆம் அது மதுரையினை தாண்டி மிகபெரும் ஏரிகளை நிரப்பியபடி கடலில் சென்று கலக்கும் வகையானது, பாண்டியர்களின் நீர்மேலாண்மை அப்படி இருந்தது

பாண்டியர்களின் மதுரை ராஜ்ஜியத்தை நாயக்கர் கைபற்றினர், ஆனால் சேர அரசு அப்படியே நீடித்தபொழுது வைகையில் நீர்வரும் பல ஓடைகள் சேரநாட்டுக்கு அதாவது கேரளாவுக்கு திருப்பபட்டன இதனால் வைகை அடிக்கடி வறண்டது

வைகையின் நீரை பெருக்கும் திட்டத்தை மன்னர் சேதுமதி இருளப்ப பிள்ளையிடம் வழங்கினார், முத்திருப்ப பிள்ளை வைகையின் மூலம் சென்று மலையில் அதற்கான வழிகளை தேடினார்

அப்பொழுதான் அங்கு ஓடு பெரியாறு எனும் ஆறை கண்டார், அது 5 சிறு ஆறுகளை கொண்டு 56 கிமீ ஓடிவந்து முல்லை எனும் இன்னொரு ஆறை 6வதாக இணைத்து கேரளாவுக்குள் ஓடிகொண்டிருந்தது

இதை தடுத்து நிறுத்தி கிழ்க்கே திருப்பி வைகையில் கலந்தால் வைகை செழிக்கும் என ஆலோசனை சொன்னார் முத்திருளப்ப பிள்ளை, மன்னன் சேதுபதி அதை மகிழ்வுடன் ஏற்றுகொண்டான்

ஆம் முதன் முதலில் முல்லை பெரியாரை வைகையில் திருப்பும் வழியினையும் அணை கட்டவேண்டிய சரியான இடத்தையும் சொன்னது முத்திருளப்ப பிள்ளையே

இது நடந்தது 1792ம் ஆண்டு
அப்பொழுது வைகை செழிக்க மன்னர் அவசரபட்ட காரணம் சேதுநாட்டில் ஏற்பட்ட வறட்சி, இந்த அணை கட்டபட்டால் வறட்சி நீங்கும்

இங்கு இரு சிக்கல் எழுந்தது முதலாவது நான் கொடுக்கும் கப்பம் எம்மக்களுக்காகவே இதனால் அணைகட்டும் பெரும் செலவில் பிரிட்டிஷ் நவாப் கூட்டாட்சி பங்குதரவேண்டும் அல்லது கப்பம் கோரகூடாது என்றார் மன்னர்

இரண்டாவது பஞ்சம் வந்ததால் அங்கு கொள்ளைவிலைக்கு தானியங்களை விற்க வந்த வெள்ளையனை துணிவுடன் தடுத்து மக்கள் நலம் முக்கியம் என்றார் மன்னர்

இது போக கப்ப பணத்தை அதிகபடுத்தினர் பிரிட்டிஷார் காரனம் ஐரோப்பாவில் நெப்போலியன் ஏற்படுத்திய அதிர்வு அப்படியே திப்பு சில்தான் கொடுத்த மிரட்டல்

இவர்களை சமாளிக்க கூடுதல் வரிகேட்டனர் பிரிட்டிசார், மக்களோ பஞ்சத்தில் வாட அது முடியாது அணை முக்கியம் உங்கள் தானியங்களுக்கு நான் வரி விதிப்பேன் என மிரட்டவும் செய்தார்

ஒரு கட்டத்தில் மக்களுக்காக சிந்தித்த மன்னரை தன் கையாளான மார்ட்டின்ஸ் மூலம் அகற்றி சிறைவைத்தனர் வெள்ளையர்

இதில் ஒரு கொடுமையும் நடந்தது சிவகங்கை சீமைக்கும் சேதுநாட்டுக்கும் ஒரு பகை உண்டு, சிவகங்கை சீமை சேதுவின் ஒரு பகுதி என அதை தன் சாம்ராஜ்யமாக கருதினார் மன்னர், இதனால் மருது கோஷ்டியும் உதவிக்கு வரவில்லை, போரும் சிறையுமாக 48 வயதிலே இறந்தார் முத்துராமலிங்க சேதுபதி

அத்தோடு இருளப்ப பிள்ளையின் முல்லை பெரியாறு கனவு முடிந்தது ஆனால் அவர் கொடுத்த திட்டம் அப்படியே இருந்தது

முத்துராமலிங்க சேதுபதிக்கு பின் அவர் அக்கா மங்களேஸ்வரி நாச்சியார் என்பவரை அரசியாக முடிசூட்டினர் பிரிட்டிசார்

100 வருடங்கள் கடந்தன‌
அந்த வழியில் வந்தவர்தான் முத்து விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி 1888ல் அவர் சமஸ்தான பொறுப்புக்கு வந்தார், இவர் சென்னையில் படித்த பட்டதாரி

அவர் சேதுபதி மன்னர்களின் இந்து பக்தி மொத்தமாய் கலந்த பிறப்பாய் இருந்தார், முன்னோர்கள் செய்த திருப்பணிகளை தொடர்ந்து செய்தார்

நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கட்டுமானம், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் குட முழுக்கு, கோதண்டராமர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், இராமநாதபுர அரண்மனை இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் சீரமைப்பு. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில் என ஏகபட்ட திருபணிகளை செய்தார்

1890களில் மிஷனரிகளுக்கும் மதமாற்ற கும்பலுக்கும் பெரும் சவாலாக திகழ்ந்தார்

தன் முன்னோரான அந்த முத்துராமலிங்க சேதுபதி கனவான முல்லை பெரியாறு அணையினை கட்ட முடிவெடுத்தார் விஜயரகுநாத சேதுபதி ஆனால் ஆங்கிலேயரிடம் இருந்து சாதகமான பதில் இல்லை

ஆங்கிலேயர்கள் இங்கு சுரண்டி பிழைக்கும் வியாபாரம் செய்ய வந்தவர்கள், இங்கு நல்லது செய்யவேண்டிய ஆசையும் அவசியமும் அவர்களுக்கு இல்லை என்பதால் மறுத்தார்கள், எனினும் இந்தியா ஓரளவு விழிப்படைய ஆரம்பித்த நேரம் சுதந்திர குரல் சிந்தனைகள் ஒலித்த நேரம் என்பதால் கொஞ்சம் சிந்தித்தனர்

ஆனால் அனுமதி தருவோம் காசுதரமாட்டோம் என்பது போல் இருந்தது அவர்கள் செயல்

கடைசியில் மன்னரே அணைகட்டலாம் என்றும், அதற்கான அனுமதியினை திருவிதாங்கூர் மகாராஜாவிடம் இருந்து பிரிட்டிஷ் அரசு பெற்றுதரும் என்றும் முடிவாயிற்று.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் வருவதால் விசாக திருநாள் மகாராஜாவின் திவான் V ராம் ஐயங்காருக்கும் மதராஸ் மாகாணத்தின் செயலாளர் J C ஹன்டிங்டன் என்பவருக்கும் இடையே 999 வருட குத்தகைக்கு 8 ஆயிரம் ஏக்கர் நிலம் கொடுக்கபட்டது

அதாவது நீர் வரத்து இருப்பது தமிழக பகுதி நீர்பிடிப்பு பகுதி தமிழக பகுதி ஆனால் அணை கட்ட இருப்பதும் நீர் தேங்ககும் பகுதியும் திருவாங்கூர் சமஸ்தானக்கானது

இந்த 999 குத்தகைக்கு ஏக்கருக்கு 5 ரூபாய் என அன்றே கொடுத்தவன் விஜயபாஸ்கர தொண்டைமான் ஆங்கிலேயன் சல்லிகாசு கொடுக்கவில்லை

மன்னன் அசரவில்லை முன்னோர்கள் கட்டாத அணையினை தான் கட்டுவதாக எழும்பினான், இருளப்ப பிள்ளையும் தன் கொள்ளுதாத்தா முத்துராமலிங்க சேதுபதியும் தன்னை வழிநடத்துவதாக எண்ணி அவர்களை வணங்கி தொடங்கினான்

அணை கட்டுவது என்பது அவனின் மொத்த ராஜ்ய சொத்துக்களுக்கு ஈடான செலவாய் இருந்தது, அவன் அசையவில்லை

அன்று பிரிட்டிஷார் பினாமிகளாக செட்டியார்கள் இருந்தார்கள், பர்மாவில் இருந்து தொடங்கிய உறவு அது, வெள்ளையரின் பணத்தை செட்டியார்கள் மூலம் சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் வாங்கி அணைகட்ட தொடங்கினான் அந்த உத்தமன்

1893 ஜூலை 21 ல் கடன் 20 லட்சம், 1894 கடனுக்கு அடகு வைத்தவை முழ்க திவாலாகிறது, 1985ல் ஏலம் விடப்பட்டது.

ஒரு வருடத்திலே கடன் மூழ்குவதும் மன்னன் திவால் நிலைக்கு வருவதும் வெள்ளையனின் மறைமுக விளையாட்டு, வங்கி போன்ற கடன் நிலையங்கள் அவன் கட்டுபாட்டிலேதான் இருந்தன‌

ஆனால் அணை வேலை ஓரளவு நடந்தது, போர்த்துகீஸ் மற்றும் டச்சு தொழில்நுட்பத்தில் அணை எழும்பிற்று எனினும் முழுமையாக பூர்த்தி ஆகவில்லை

பூர்த்தி ஆக வெள்ளையன் விடவுமில்லை, தன் அரசில் ஒரு மன்னன் அணைகட்டுவது தங்களுக்கு அவமானம் என கருதி மறைமுகமாக தடுத்தனர்

மன்னனின் சொத்தெல்லாம் அரசுக்கு சென்றது, எஞ்சியிருக்கும் சில சொத்துக்களுக்கு தன் மழலை ராஜேஸ்வர சேதுபதியினை வாரிசாக்கி அதையும் தர்ம ஸ்தாபனமாக மாற்றிவிட்டு இறந்தான் பாஸ்கர சேதுபதி
அப்பொழுது அவருக்கு வயது வெறும் 35

இன்றைய பணத்தில் பல்லாயிரம் கோடி பணம் மற்றும் 500 பேர் சாவு என்பதோடு அணையின் அத்தியாயம் அன்று முடிந்தது

ஆம் அவர் அந்த முத்துராமலிங்க சேதுபதியின் மறு அவதாரம், அணைகட்ட முயன்று தோற்று 100 வருடம் கழித்து வந்து மறுபடியும் தோற்று 40 வயதுக்குள்ளே இறந்த அந்த மறுபிறப்பு

(ரஜினியின் லிங்கா கதை இந்த பாஸ்கர சேதுபதி பற்றியதே, ஆனால அதை வாய்விட்டு சொல்ல இயக்குநருக்கோ ரஜினிக்கோ மனமில்லை

ஏனென்றால் அதுதான் சினிமா உலகம், அவர்கள் அப்படித்தான்.)

விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்காது, அதுவும் நல்லோர் கண்ட கனவு ஒரு காலமும் தோற்காது

மன்னன் தொடங்கி வைத்த அணை என்னாயிற்று என ஆளாளுக்கு கேள்வி எழுப்பினர், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வரை செய்தி எட்டிற்று

வேண்டா வெறுப்பாக அணைகட்ட பென்னிகுயிக் என்பவனை இழுத்து வந்தனர் அவன் தன் அறிவில் ஒரு அணையினை ஆங்கிலேயன் ஒதுக்கிய பணத்தில் கட்டினான் அது நிலைக்கவில்லை

நிலைக்கவில்லை என்பதை விட பென்னிகுயிக்கின் திட்டம் சரியில்லை என்பதே பொருள்

அரசு பணத்தை வீணாக்கினான் பென்னிகுயிக் என சொல்லி திட்டத்தை நிறுத்தியது வெள்ளை அரசு, ஏனோ அது கட்டபடுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை

தோற்றுபோன பொறியாளன் என்றால் எதிர்காலம் பாதிக்கபடும் என கருதி இன்னொரு பொறியாளனிடம் வடிவம் பெற்று தன் சொத்துக்களை போட்டு எப்படியோ கட்டிமுடித்தான் பென்னிகுயிக்
அவன் புதிதாக கட்டியது கொஞ்சமே அதற்கான அடித்தளம் பாஸ்கர சேதுபதியால் மிக வலுவாக இடபட்டிருந்தது, பெனிகுயிக் செலவழித்தது சொற்பமான பணமே, 1895ல் அணை பயன்பாட்டுக்கு வந்தது

இன்று கம்பீரமாக நிற்கின்றது அந்த முல்லை பெரியாறு அணை

அதற்கு பென்னிகுயிக்கும் ஆங்கில அரசும் காரணம் என சொல்லி பென்னிகுயிக்கு சிலை வைத்து அவனுக்கு மணிமண்டபமும் கட்டி கொண்டாடுகின்றது தமிழக அரசு

இன்று பென்னிகுயிக் என்பவனுக்கு பிறந்த நாள், இது அரசுவிழாவாம்

இதை செய்தது யாரென்றால் திராவிட அரசுகள், ஏன் அவை இப்படி செய்தன என்றால் திராவிட சித்தாந்தமே ஆங்கிலேயனை வழிபட்டு அவன் சொன்னதை உண்மை என நம்பிய கூட்டத்தின் உருவாக்கம்

காங்கிரஸும் திமுகவும் வெள்ளையனின் வாரிசுகள் என்பதால் வெள்ளையன் பென்னிகுயிக் இங்கு சிலையாக நிற்கின்றான் அவனுக்கு தமிழக அரசின் கொண்டாட்டமும் உண்டு

ஆனால் தமிழக இந்து மன்னன் முத்துராமலிங்க சேதுபதியினையும் அவனின் கொள்ளுபேரன் விஜய பாஸ்கர சேதுபதியினையினையும் நினைத்து பார்க்க யாருமில்லை

என்று தமிழகத்தில் காங்கிரசும் திமுகவும் இல்லாத, தேசிய அபிமானமும் இந்து அபிமானமும் கொண்ட இயக்கம் வலுபெறுமோ அன்று பென்னிகுயிக் மண்டபம் சேதுபதி மண்டபம் என மாற்றபடும்

அவன் சிலைக்கு பதிலாக சேதுபதி மன்னர்களான முத்துராமலிங்க சேதுபதி , விஜயபாஸ்கர சேதுபதி மற்றும் முத்திருளப்ப சேதுபதி ஆகியோரின் சிலைகள் நிறுவபடும்

ஆம் இங்கு மறைக்கபட்டதும் புதைக்கபட்டதும் ஏராளம், எக்காலமும் இங்கு தமிழன் ஒரு இந்தியன் என்பதும் இந்திய மன்னர்களில் அவன் தனித்து இந்துவாக இருந்தான் என்பதும் வெளிவரகூடாது என்ற சதிகார சிந்தனை கொண்டோரின் வில்லதனங்கள் ஏராளம்

சேதுபதி மன்னர்கள் ஏன் அணைகட்ட முயன்றார்கள் என்றால் கோவில்கள் அமைப்பதும் ஏரி குளம் வெட்டுவதும் அவர்கள் சேவையாய் இருந்தன‌

அவர்களை பற்றி சொன்னால் இந்துபக்தி வளரும், தேசாபிமானம் பெருகும், இப்படிபட்ட நல்லவர்களை வெள்ளையன் பாடாய் படுத்தினான் என்ற வரலாறு வெளிவந்துவிடும் அதில் காங்கிரஸ் கொள்கையும், திராவிட சிந்த்தாந்தமும் பல்லிளிக்கும் என பல காரணங்களால் அது மறைக்கபட்டு வெள்ளையனே நல்லவன் அவனே அணைகட்டினான் என இங்கு நிறுவியும் விட்டார்கள்

வரலாற்றில் எவ்வளவோ உண்மைகள் புதைக்கபட்டன, அதில் ஆழகிடப்பது முத்துராமலிங்க சேதுபதி, இருளப்ப பிள்ளை, விஜயபாஸ்கர சேதுபதி ஆகியோரின் உழைப்பும் மக்கள் அபிமானமும்

முல்லைபெரியாரின் அடிதளத்தில் அவர்கள் மனம் புதைத்தது போல அவர்களின் பெயரை புதைத்துத்தான் பென்னிகுயிக் சிலை எழும்பி நிற்கின்றது

ஒரு காலம் வரும், அன்று பென்னிகுயிக் சிலை வீழ்த்தபட்டு சேதுபதி பெயரும் சிலையும் கம்பீரமாக எழுந்து நிற்கும்

முல்லை பெரியாறு அணைக்கே அந்த முத்திருளப்ப பிள்ளை பெயர் சூட்டபடும், ஆம் முதன் முதலில் அந்த அணை பற்றி மிக தீர்க்கமாக சொன்னவன் அவனே, அது அமைய காரணமும் அந்த நெல்லையின் பிள்ளையே

By
ஸ்டன்லி ராஜன்

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.