‘இந்து மதத்தில் சாதிக் கொடுமை இருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் பிற சாதியினரால் கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றனர். அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன.’ என்று கூறித் தான் தலித் மக்களை இந்துக்களிடம் இருந்து பிரித்து கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் வேலையில் மிஷனரிகள் ஈடுபடுகின்றனர். தற்போது இதற்கு சில அரசியல் கட்சிகளும் உடந்தையாக இருக்கின்றன.

ஆனால் உரிமைகள் பறிக்கப்பட்டு வந்ததாகக் கூறி கிறிஸ்தவ மதத்துக்கு மாறுபவர்களுக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் சம உரிமை கிடைக்கிறதா என்றால் இல்லை. தலித் கிறிஸ்தவர்களுக்கு என்று தனி சர்ச், கல்லறை என்று அங்கு நிலைமை மேலும் மோசமாகத் தான் செய்கிறது. இங்கு தலித் கோவில் என்று எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இத்தனை நாட்களாக இந்து மதத்தில் சம உரிமை கிடைக்காததால் மதம் மாறுகிறோம் என்று சொல்லிச் சென்றவர்கள் இப்போது தலித் கிறிஸ்தவர்களுக்கு சம உரிமை வேண்டும் என்று போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 18 மறை மாவட்டங்களில் 80% தலித் கிறிஸ்தவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இவற்றில் ஒரு‌ தலித் கிறிஸ்தவர் மட்டுமே ஆயராக நியமிக்கப்பட்டதாக கத்தோலிக்க தலித் கிறிஸ்தவ அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

இந்தியா முழுவதும் இருக்கும் 31 பேராயர்களில் ஒருவர் மட்டுமே தலித் கிறிஸ்தவர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். மேலும் கிறிஸ்தவத்துக்கு மாறிய பின் உயர் சாதியினரின் கொடுமை மட்டுமல்லாது சர்ச் நிர்வாகத்தின் கொடுமையையும் அனுபவிக்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே தலித் கிறிஸ்தவர்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார்கள்.

தமிழக கத்தோலிக்க திருச்சபையில் தலித் கிறிஸ்தவர்களை ஆயர்களாக நியமிக்க வேண்டும் என்று நேற்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கலந்து கொண்டது. தலித்களுக்கு உரிமை கிடைப்பது அவசியம். ஆனால் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு கிறிஸ்தவத்தில் இருப்பதற்கு தாய் மதம் திரும்பி விடலாமே?

தனி இட ஒதுக்கீடு கேட்பது இந்து தலித்களை மதமாற்றத்துக்கு தூண்டுவது போல் ஆகி விடாதா? தலித்கள் அர்ச்சகர்களாக வேண்டும் என்று போராட்டம் செய்யும் ‘சமூக நீதி’ கட்சி தி.மு.க தலித்களை ஆயர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு குரல் கொடுக்காதது ஏன்? இது தான் பெரியார் மண், பெரியாரியத்தின் சாதனையா? என்று சமூக ஊடகங்களில் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.