Indic Collective அமைப்பு சார்பாக அதன் தலைவர் ரமேஷ் மற்றும் ஸ்ரீ ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் ஆகியோர் இந்து சமய அறநிலையத் துறை கோவில் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் ‘கோவில் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் சட்ட விதிகள் அமைக்கப்பட்டிருக்கும் அவை ஏன் அமல்படுத்தப்படுவது இல்லை? அதிகாரிகளுக்கு கார் வாங்குவதற்கு கோவில் நிதி ஏன் பயன்படுத்தப்படுகிறது?’ என்று சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

பழனி தண்டாயுதபாணி கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உட்பட பிரபலமான உபரி உண்டியல் வசூல் மற்றும் வருவாய் அதிகம் உள்ள பெரிய கோவில்களின் நிதியில் இருந்து கிராமப் புறங்களில் உள்ள சிறிய வருமானம் இல்லாத கோவில்களைச் சீரமைப்பதற்காக 10 கோடி ரூபாயை ஒதுக்க அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து Indic Collective மற்றும் ஆலய வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ரமேஷ் மற்றும் ஸ்ரீ ரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில் அறநிலையத் துறை மற்றும் அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

நீதிபதிகள் ஹேமலதா மற்றும் சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனுவில், கோவில் பரம்பரை அறங்காவலர்கள் ஒப்புதல் பெற்று பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்பு மட்டுமே கோவில் நிதியை பயன்படுத்துவது பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அறங்காவலர்கள் இன்றியோ பொதுமக்களின் கருத்துகளுக்கு செவிமடுக்காமலோ நிதியை பரிமாற்றம் செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களுக்கு இன்னும் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தற்காலிக உறுப்பினர்களை நியமித்து கோவில் நிதியை அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் வாகனங்கள் வாங்கவும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு சிற்றுண்டி வாங்கவும் பயன்படுத்துவதாக கூறிய மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து ஒதுக்கப்படும் 10 கோடி ரூபாயால் பயன் பெறப்போகும் கோவில்களை இன்னும் அடையாளம் காணவில்லை என்றும் அறநிலையத்துறை மீது குற்றம் சாட்டினார்.

இது குறித்து கருத்து கூறிய நீதிபதிகள், “கோவில் சொத்துககளில் பல ஆக்கிரமிக்கப்பட்டுள்ள போதும் அவை நீக்கப்படுவது இல்லை. இதற்கு நிர்வாக காரணமோ தேர்தல் காரணமோ இருக்கலாம். ஆனால் கோவிலுக்காக முன்னோர்கள் எழுதி வைத்த நிலங்கள் எவ்வாறு தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்குகின்றன? கோவில் சொத்துக்களை பாதுகாக்க சட்டங்களும் விதிகளும் இருந்தும் அவை முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

இந்த விஷயத்தில் அதிகாரிகளுக்கும் சட்டசபைக்கும் இருக்கும் அதிகாரங்களை நாங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை. எனினும் உங்கள் அதிகாரங்களை நீங்கள் முறையாக செயல்படுத்தினால் நாங்கள் வர வேண்டிய அவசியம் என்ன? கோவில் நிதியை ஏன் அதிகாரிகளுக்கு கார் வாங்க பயன்படுத்த வேண்டும்? இவ்வாறு வாங்கப்படும் புதிய கார்கள் எங்கு செல்கிறது என்பது தெரியும். ‘சிவன் சொத்து குலநாசம்’ என்பது சொல்வழக்கு.

இதுவரை கோவில் சொத்துக்கள் எவ்வளவு உள்ளன என்பது பற்றி கணக்கிடப்பட்டுள்ளதா? கோவில்களுக்கு சொந்தமான பல சொத்துக்கள் தனி நபர்களின் வசம் உள்ளன. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோவில்களின் சொத்துக்களின் விவரங்களாவது பராமரிக்கப்படுகின்றனவா? அந்த நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன? அவை எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன? இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் இந்த விவரங்களை நீங்கள் கணக்கிட மாட்டீர்கள். கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பதில் உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கிறது?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், பெரிய கோயில்களின் உபரி நிதி பயன்படுத்தப்பட ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசு தாக்கல் செய்யும் பதில் மனுக்களில் தங்களுக்கு திருப்தி இல்லாத பட்சத்தில் நீதிமன்றத்துக்கு உதவ அறநிலையத்துறை செயலர், ஆணையர் ஆகியோரும் இருக்க வேண்டும் என உத்தரவிடவும் தயங்கமாட்டோம் என்று நீதிபதிகள் கூறியதோடு விசாரணையை அடுத்ததாக டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.