தமிழ்நாடு புதுச்சேரி இடையிலான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். புதுச்சேரியில் தேசிய‌நெடுஞ்சாலை 45-Aல் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்குக்கு மேல் 1கிமீ நீளத்தில் 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம்‌ நாட்டுக்கு அர்ப்பணித்த அமைச்சர், 11,000 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு புதுச்சேரி இடையிலான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இது தற்பேது நிலவி வரும் போக்குவரத்து நெரிசலில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்றும் கூறினார்.

மேலும் இது நேரம் மற்றும் எரிபொருளை சேமிப்பதால் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் என்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் என்றும் கூறிய அமைச்சர் நிதின் கட்கரி, 297 கிலோமீட்டர் தொலைவுக்கு கிட்டத்தட்ட 11,000 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு புதுச்சேரி இடையிலான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் நடந்து வருகின்றன என்று கூறியுள்ளார்.

NH-45 நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்றுவதன் மூலம் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் துறைமுகம் மற்றும் கன்னியாகுமரி வரை செல்லும் நெடுஞ்சாலைக்கு தடையில்லா போக்குவரத்து வசதி கிடைக்கும்‌ என்று கூறினார். புதுச்சேரியில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு ₹ 70 கோடி செலவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புதுச்சேரி எல்லையை ஒட்டிய மடகாடிப்‌ பேட்டையில் இருந்து அரியலூர் வரையிலான 8கிமீ நீளச் சாலை அமைக்கும் பணிகள் 9 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது வரும் டிசம்பர் மாதம் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னை‌யை புதுச்சேரியுடன் இணைக்கும்‌ மற்றொரு எளிய போக்குவரத்து வழியாக சீ ப்ளேன் எனப்படும் நீரில் தரையிறங்கக் கூடிய சிறிய விமானங்களின் சேவையைத் தொடங்கலாம் என்ற யோசனை இருக்கிறது என்று கூறிய நிதின் கட்கரி, புதுச்சேரி அரசு இதற்கான முயற்சிகளைத் தொடங்கினால் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்துள்ளார். சென்னை மட்டுமல்லாமல் காரைக்கால் மற்றும் கன்னியாகுமரியையும் புதுச்சேரியுடன்‌ இணைக்க இந்த வழிமுறை உபயோகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.