மனித இனத்தில் அன்பு ஊற்றெடுக்க தன் வாழ்நாளின் அனைத்து பக்கங்களையும் பரிசோதனைக்கு உள்ளாக்கிய மகான் மகாத்மா காந்தி. முழுமையான முயற்சியே, முழுமையான வெற்றி என்கிற தாரக மந்திரத்தை நம் தேசத்திற்கும், ஏன் உலகத்திற்கே வழங்கியவர்.

உங்களுடைய முழுமையை வழங்குங்கள். ஒருவேளை அதில் இடரி விழுந்தால், உங்களை மீட்டெடுத்து முன்னோக்கி செல்லுங்கள். உங்களால் ஓட முடியாவிட்டால், நடந்து செல்லுங்கள். நடக்க முடியாவிடில், தவழ்ந்து. இவ்வாறாக இயங்கி கொண்டேயிருங்கள். நாளின் இறுதியில் நீங்கள் மேற்கொண்ட முயற்சி மட்டுமே உங்களுக்கு பேரானந்தத்தை அவை ஏற்படுத்தும் விளைவுகள் அல்ல. என்கிற பெரும் தத்துவத்தை உலகிற்கு வழங்கினார்.

ஓர் ஆன்மீக குரு வழியே கிடைக்க வேண்டிய ஞானத் திறப்புகள் இவை. தன் வாழ்க்கையை பரிசோதனைக்கு உட்படுத்தி மக்கள் நலனை மட்டுமே வேண்டிய ஞானி அவர்.

அவர் எப்போதும் சொல்லும் மந்திரம் ஹே ராம்! மந்திரம் என்பது ஆனந்தத்திற்கான சூத்திரம் என்பதை நம்பினார் காந்தி. பல மைல்கள் நடந்து கடக்கையில் சோர்வுறும் உணர்வு தோன்றுகிரா போதெல்லாம் இந்த மந்திரத்தை தனக்கு தானே சொல்லிக்கொள்வார். இந்த மந்திரத்தின் லயத்தினில் அவருடைய கால்கள் உறுதிபெறும். அந்த லயத்தின் பலம் பெருகி அவர் மூச்சுக்காற்று வலிமையுறும். இந்த உறுதி அவருடைய மனதை பலப்படுத்தும். அச்சமும், கோபமும் சூழ்கிற போது ஹே ராம் எனும் மந்திரம் அவர் உணர்வுகளுடன் நிகழ்த்தும் மாயங்கள் ஆயிரம்.

ஏகநாத் அவர்கள் எழுதிய ஆங்கில நூல் ஒன்றில் காந்தி பற்றிய ஒரு குறிப்பு வருகிறது, அதாவது பத்திரிக்கையாளர் ஒருவர் காந்தி அவர்களிடம் உங்கள் வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்பதை கேட்ட போது, சட்டென மூன்று வார்த்தையில் அவர் சொன்ன மந்திரம் . இதை தமிழ்ப்படுத்த வேண்டுமெனில் பற்றை விடு ஆனந்தம் நாடு என சொல்லலாம்.

ஆனால் இது அவருடைய ஆன்மீக ஞானத்தால் அனுபவத்தால் கூறியவை மாத்திரம் அல்ல, இது இசா உபநிஷதத்தின் முதல் மந்திரம் என சொல்லப்படுகிறது.

வேத தத்துவத்தை துல்லியமாக சொல்லும் இசா உபநிஷதத்தின் முதல் வரி தேன த்யாக்தேன புஞ்சீதா கடவுளால் உனக்கு ஒதுக்கப்பட்டிருப்தை ஏற்றுக்கொள் என்று இந்த வரிக்கு பொருள். இதன் சாரம்சத்தையே பற்றை துறந்து ஆனந்தம் கொள்ளென காந்திஜி அவர்கள் கூறியதாக அந்நூல் சொல்கிறது.

நம் தேசத்தின் முன்னோடி தலைவர், அவர் அடைந்த வெற்றி ஆன்மீக பலத்தின், அனுபவத்தின், ஞானத்தின் அடிப்படையின் விளைந்தது என்றும் சொல்லலாம். மக்கள் நலத்தையே பேணிய மகத்தான தலைவரின் ஜென்ம தினத்தில் அவரை போற்றி வணங்குவோம்.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.