அர்ஜுன் சம்பத் இரங்கல் செய்தி!
வீரத்துறவி ஐயா, திரு இராம கோபாலன் அவர்கள் காலமானார் என்கிற செய்தி நம் அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுக்க இருக்கக்கூடிய இந்துசமய தொண்டர்கள் பலரை உருவாக்கியவர். 1940களில் சங்கத்தின் முழுநேர ஊழியராக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். தமிழகத்தில் ஞான சம்பந்தர் அவதாரம் செய்த சீர்காழியை பூர்வீகமாகக் கொண்டவர். அந்தக் காலத்திலேயே என்ஜினியரிங் படிப்பு படித்தவர். தனது குடும்ப நலன் கருதாமல் தேச நலன் கருதி சங்கத்தில் இணைந்து பணியாற்றியவர்.
பிரிவினையின்போது ஹிந்துக்களுக்கு நேரிட்ட இன்னல்களை கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்து அதன் காரணமாக சங்கத்தில் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டு இன்று வரை இடையறாது பணியாற்றியவர்.
தமிழகம் மற்றும் கேரளத்தில் சங்கப் பணிகள் வலிமையாக வேரூன்ற அல்லும் பகலும் அயராது உழைத்தவர். இன்றைக்கு கேரளத்திலும் தமிழகத்திலும் இந்திய அளவிலும் பிரபலமாக இருக்கக் கூடிய பல ஹிந்து தலைவர்கள் ஐயா வீரத்துறவி ராமகோபாலன் அவர்களின் வழிகாட்டுதலில் உருவானவர்கள்.
சிறந்த பேச்சாளர். அவருடைய பேச்சுக்கள் பலருக்கு தேச சேவை செய்யும் உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. தலைச்சிறந்த எழுத்தாளர். நல்ல ஒருங்கிணைப்பாளர். தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களோடும் நெருங்கிப் பழகியவர்.அனைத்து கட்சியினரின் நன்மதிப்பைப் பெற்றவர். பல மொழிகளில் புலமை பெற்றவர். தமிழில் சுவாமி விவேகானந்தருடைய கொழும்பிலிருந்து அல்மோரா வரை என்கிற புத்தகத்தை தமிழில் எழுதியவர் எழுமின் விழிமின் என்கிற தலைப்பில் வெளியிட்டவர்.
ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, வார இதழ்களில் பல கட்டுரைகளும் பாடல்களும் எண்ணங்கள் எதிரொலிகள் அனுபவங்கள் என்கிற தலைப்பில் தன்னுடைய அனுபவங்களையும் தொடர்ந்து எழுதி வந்தார். 1982 மண்டைக்காடு கலவரத்திற்குப் பிறகு மீனாட்சிபுரம் மதமாற்றம் சம்பவத்திற்குப் பிறகு இந்து முன்னணி பேரியக்கத்தை துவக்கி தமிழகத்தில் இந்துக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்தவர்.
தினசரி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தவர் அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு 1986இல் அவர் மீது கொடும் தாக்குதல் நடத்தப்பட்டது அன்னை மீனாட்சியின் அருளால் அவர் பிழைத்துக் கொண்டார். தான் வெட்டுப்பட்ட பிறகும்கூட அஞ்சாமல் உயிருக்கு பயப்படாமல் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து இந்து முன்னணி மற்றும் சங்கத்தையும் வலிமைப்படுத்தியவர். எங்களைப்போன்ற பல இந்து தலைவர்களை உருவாக்கியவர்.
அவரால் உருவாக்கப்பட்டு அவரால் வழிநடத்தப்பட்டு இன்றளவிலும் அவருடைய வழிகாட்டுதலின் பெயரிலேயே நாங்கள் அனைவருமே செயல்பட்டு வருகின்றோம்.
தமிழகத்தில் மோசடி மதமாற்றத்தை தடுத்தது, இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்கொண்டது, ஹிந்து சிந்தனை உள்ள பல நல்ல கல்வி நிலையங்கள் உருவானது, வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தது, பலரை தாயசமயம் திருப்பியது உள்ளிட்ட பல நற்பணிகள் வீரத்துறவி ராமகோபாலன் அவர்கள் வழிகாட்டலில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
தமிழகத்தில் மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் உடைய மூன்றாம் ஆண்டு பயிற்சி நடைபெறுகின்ற நாகபுரியில் கூட மூன்றாம் ஆண்டு பயிற்சி கோபால்ஜி பேசுகிறார் என்று சொன்னாள் பல வடமாநில தலைவர்கள் கூட கோபால்ஜியை குருநாதராக ஏற்றுக் கொண்டு வந்து அவருடைய பேச்சை கேட்பார்கள்.
நல்ல ஆன்மீக ஞானம் பெற்றவர். அவருடைய வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய தவம். ஸ்ரீ காயத்ரீ ஜபம் செய்வார். ஆஞ்சநேயர் உடைய உபாசகர். தினசரி அவர் நடத்தக்கூடிய பூஜைகளை பார்ப்பதற்கு காண கண் கோடி வேண்டும்.
காஞ்சி மகா பெரியவரின் தீவிரமான பக்தர் அவரைப் போலவே ஒரு நூற்றாண்டு காலம் அவர் வாழ்ந்து இந்த சமுதாயத்திற்கு வழி காட்டுவார் என்று நாங்கள் கருதினோம்.
ஆனால் இடையில் இவ்வளவு பெரிய பேரிழப்பு கோபால்ஜி போன்றவர்கள் மரணத்தை வென்றவர்கள். கோபால்ஜி போன்ற மகான்களுக்கு பிறப்பு இறப்பு கிடையாது. ரிஷி முனிவர்களின் பரம்பரையில் வந்தவர்.
கோபால்ஜி ஒரு தென்னாட்டு திலகர். திலகர் எப்படி ஒரு தவம் செய்தாரோ சுதந்திர வேள்வித்தீயிலே ஆகுதி ஆனாரோ அதுபோல கோபால் ஜி இன்று தமிழகத்தில் ஒரு வாழ்வை வேள்வியாக அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
கோபால்ஜி அவர்களால் தமிழ்நாட்டிலேயே விநாயகர் சதுர்த்தி விழா பெரிய அளவில் பிரபலம் அடைந்தது திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல அனைத்து கட்சித் தலைவர்களும் மாற்றுக்கருத்து உள்ளவர்களும் கூட கோபால்ஜி மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்கள்.
அவருடைய இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாதது. தீண்டாமை, ஜாதிக் கொடுமைகள், மோசடி மதமாற்றம், ஜிகாதிகளின் பயங்கரவாதம், இவற்றிற்கு எதிராக அல்லும் பகலும் அயராது உழைத்தவர் எங்கள் குருநாதர். அவரது ஆன்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.
தமிழக அரசாங்கம் வீரத்துறவி இராமகோபாலன் ஜி அவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் அவருக்கு ஒரு மணிமண்டபம் அமைத்திட வேண்டும். மத்திய அரசாங்கம் அவருக்கு பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டும். என்ற கோரிக்கையை இந்து மக்கள் கட்சியின் சார்பில் முன்வைக்கின்றோம்.
அவரது வழியில் அல்லும் பகலும் அயராது உழைப்போம் என்கின்ற சங்கல்பத்தை எடுத்துக் கொள்கின்றோம். எங்கள் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்.
DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.