தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேஸ்வரர் மற்றும் வைகுண்டபதி கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி தலைமையிலான மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வு நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தமிழக அரசு கோவில் சொத்துக்களை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சங்கர ராமேஸ்வரர் மற்றும் வைகுண்டபதிகோவில்களுக்கு சொந்தமான நிலங்களை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருப்பதாகவும் அவர்கள் அதிகாரிகளின் துணையுடன் ஆக்கிரமித்த நிலங்களுக்கு உரிமை கொண்டாடுவதாகவும் குறிப்பிட்டு நிலங்களை மீட்கக் கோரி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பியுள்ளார்.
இந்த மனுவை அறநிலையத்துறை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த போதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
மேலும் கிட்டத்தட்ட 15 லட்சம் ஏக்கர் அளவுக்கு கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளதாகவும் ஆனால் தமிழக அரசு மானிய கோரிக்கை விவாதத்தின்போது முதலில் 5.25 லட்சம் ஏக்கர் என்றும் பின்னர் 4.75 லட்சம் ஏக்கர் என்றும் மாறி மாறி கூறி சொத்துக்களின் அளவையே சுருக்கி வருவதாகவும் வாதத்தின் போது அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சில நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கோவில்களின் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.