சீனப்பெருஞ்சுவர் கேள்விபட்டிருக்கோம். ஆனால் இந்தியப் பெருஞ்சுவர் கேள்விப்பட்டதுண்டா?. இந்தியாவின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் அந்த பிரம்மாண்ட சுவரைப் பற்றி இங்குப் பார்ப்போம்.

அண்டை நாடான சீனாவில் இருக்கும் பெருஞ்சுவர் குறித்து அறிந்துவைத்திருக்கும் நாம், நம் நாட்டில் உள்ள அதிசயத்தை சற்றும் கவணிப்பதில்லை. அவ்வாறு நாம் தவறவிட்ட பெருஞ்சுவரே கும்பல்கர்க் கோட்டையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் அதிக கோட்டைகளை கொண்ட மாநிலம் ராஜஸ்தான். அங்குள்ள இந்தக் கோட்டை ராஜ ரானா கும்பா என்பவரால் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 1100 அடி உயரத்தில் ஒரு மலையின் மீது அமைந்திருக்கும் இந்த கோட்டையின் சுற்றுச்சுவர் கிட்டத்தட்ட 38கி.மீ தூரமுடையதாகும். சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்து மிக நீளமான சுவராக இருப்பதால் இதனை ‘இந்திய பெருஞ்சுவர்’ என்று அழைக்கின்றனர்.

இந்த கோட்டையின் அகலம் 15 அடியாகும். 7 கோட்டை வாயில்களை கொண்ட இந்த கோட்டையினுள் 300 இந்து கோயில்களும் 60 ஜெயின் மத கோயில்களும் உள்ளன. 19ஆம் நூற்றாண்டு வரை ராஜ பரம்பரையினர் இங்கு வசித்திருக்கின்றனர். இங்கு தான் மேவார் ராஜ்யத்தின் மிகச்சிறந்த அரசனாக போற்றப்படும் மகாரான பிரதாப் பிறந்திருக்கிறார்.

கும்பல்கர் கோட்டையில் உள்ள ஏழு மிகப்பெரிய நுழைவாயில்களில் ராம் போல் என்ற வாயில் மிகவும் பெரியதாக கருதப்படுகிறது. அதோடு இங்கு வரும் பயணிகள் ஹனுமான் போல் என்ற வாயிலின் அருகே இருக்கும் கோவிலுக்கு சென்று வழிபடலாம். இவைத்தவிர ஹுல்லா போல், பாக்ரா போல், நிம்பூ போல், பைரவா போல் மற்றும் டாப்-கானா போல் ஆகிய நுழைவாயில்களையும் இந்தக் கோட்டை கொண்டுள்ளது.

இந்த கோட்டையின் மதில் சுவர்களின் மேல் நின்று ஆரவல்லி மலைத்தொடரையும், தார் பாலைவனத்தையும் பார்க்கலாம். கும்பல்கர்க் தேசிய பூங்கா இங்குள்ள மற்றுமொரு சுற்றுலாத் தளமாகும்.
கும்பல்கர் கோட்டைக்கு உட்புறம் கர்தார்கர் என்ற இன்னொரு கோட்டையும் அமைந்திருப்பது வியப்படையச் செய்கிறது.

Author rajappa thanjai

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.