எஸ். வேதாந்தம்ஜி, ஆர்ஆர். கோபால்ஜி தலைமையில் நடந்த கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை பொதுக்குழுவில் தீர்மானம்
விசுவ இந்து பரிஷத்–தமிழ்நாடு’ அமைப்பின் ஒரு அங்கமாக செயல்படும், கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டம், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் 10.02.2021 ஆம் தேதி நடந்தது.

தமிழ்நாட்டில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், 10.02.2021 ஆம் தேதி,  கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் திரளாக கலந்து கொண்ட கிராமக்கோவில் பூஜாரிகள்.

பேரவை நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான எஸ்.வேதாந்தம் தலைமை வகித்தார். பேரவை அறங்காவலரும், ‘விசுவ இந்து பரிஷத் – தமிழ்நாடு’ மாநில தலைவருமான ஆர்ஆர்.கோபால்ஜி, பூஜாரிகள் பேரவை கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவையின் நீண்ட காலக் கோரிக்கையான, பூஜாரிகள் மாத ஓய்வூதியத்தை ரூ. ஆயிரத்திலிருந்து ரூ. 3 ஆயிரமாக உயர்த்தியதுடன், ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தியும், கரோனா ஊரடங்கின்போது பேரவையின் கோரிக்கையை ஏற்று நலவாரியத்தில் பதிவு செய்திருந்த பூஜாரிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கியும், தைப்பூச நாளை அரசு விடுமுறையாகவும் அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது.

2016 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற அரக்கோணம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு மாத ஊக்கத்தொகையும் நலவாரிய சலுகைகளை உயர்த்தியும், தொடர்ந்து வழங்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் அதுபற்றி இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஜெயலலிதா வழிநடப்பதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு, அவரது வாக்கை காப்பாற்றும்விதமாக, அனைத்து கிராமக்கோயில் பூஜாரிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரத்து 500 ஊக்கத்தொகை மாதம்தோறும் வழங்க வேண்டும்.

மாற்றுமத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.85 வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்துக் கோயில்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி வருமானம் வந்தும், பல கிராமக் கோயில்களில் ஒரு விளக்கு எரிவதற்குக்கூட வசதி இல்லை. எனவே கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
கோயில்களுக்கு தானமாகக் கொடுக்கப்படும் பசுமாடுகள் அறநிலையத்துறையினரால் குறைந்த தொகைக்கு ஏலமிடப்பட்டு, அவை மாமிசத்திற்காக மறுவிற்பனை செய்யப்படுகின்றன. எனவே அதை தடுத்து பசுக்களை கிராமக்கோயில் பூஜாரிகளுக்கு வழங்க வேண்டும்.

தக்கார் மற்றும் அறங்காவலர்கள் குழுவில், கோயில் புனிதத்தையும் பூஜை முறைகளையும் அறிந்த சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், கிராமக்கோயில் பூஜாரிகள் போன்றோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முடங்கியுள்ள பூஜாரிகளின் நலவாரியத்தை விரைவில் செயல்படுத்தி அனைத்துப் பூஜாரிகளும் பயன்பெற செய்ய வேண்டும். மற்ற வாரியங்களைப்போல் இணையதளம் மூலம் பதிவு செய்யும் வசதி செய்து தரப்படவேண்டும்.
பூக்கட்டும் தொழிலில் பல லட்சம் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். கந்து வட்டிக்காரர்களின் பிடியில் உள்ள அவர்களை மீட்க, தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், மேளதாள வித்வான்கள், சீர்பாதம் தாங்கிகள், துப்புரவு பணியாளர்கள் போன்றோர்களுக்கும் மாத ஊதியமாக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கவும், அவர்களுக்கும் ஓய்வுதியம் வழங்கவும் வேண்டும்.
/சிறப்பு கோர்ட் /
கோயில் தொடர்பான ஏராளமான வழக்குகளை விரைவில் முடிக்க சிறப்பு கோர்ட் அமைக்க வேண்டும். என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமக்கோயில் பூஜாரிகள் கலந்து கொண்டனர்.

செயல்தலைவர் செல்லமுத்து, புரவலர் வக்கீல் ரத்தினசாமி, துணைத்தலைவர் முனைவர் கிரிஜாசேஷாத்ரி, மாநில இணைப்பொதுச் செயலாளர்கள் கணேசன், விஜயகுமார், சந்திரசேகரன் ஆகியோர் பூஜாரிகள் பேரவையின் ஒற்றுமை மற்றும் செயல்மேம்பாடுகள் குறித்து விளக்கவுரையாற்றினர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநில இணைப்பொதுச் செயலாளர் ராமசுப்பு உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். முன்னதாக பட்டாபி வரவேற்றார். கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவை அமைப்புச் செயலாளரும், விசுவ இந்து பரிஷத்–தமிழ்நாடு பொதுச்செயலாளருமான சோமசுந்தரம் நன்றி கூறினார்.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.