விசுவ இந்து பரிஷத்–தமிழ்நாடு தலைவர் ஆர்ஆர். கோபால்ஜி பேட்டி
*
‘விசுவ இந்து பரிஷத் –தமிழ்நாடு’ மாநில பொதுக்குழுக் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் 10.02.2021 இல் நடந்தது.
நிறுவனத் தலைவர் எஸ்.வேதாந்தம் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஆர்ஆர். கோபால்ஜி தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எஸ். வேதாந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் திருக்கோவில் பூஜாரிகள் 6 லட்சம் பேர் உள்ளனர். திருக்கோவிலை மட்டும் நம்பியே இருக்கின்றனர். உண்டியல் வருமானம் கிடையாது. கிராமக் கோவில்களுக்கான ஒருகாலபூஜை திட்டத்துக்கு ரூ.300 வழங்கப்படுகிறது. அதை மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.
பூஜாரிகள் நல வாரியத்தின் மூலம் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சில அரசு அதிகாரிகள் தடையாக உள்ளனர். ஏழ்மையில் உள்ளவர்களின் வறுமையை பயன்படுத்தி மதமாற்றுவதை சுப்ரீம்கோர்ட் கண்டித்துள்ளது. தமிழகத்தில் பெருமளவு மதமாற்றம் நடந்து வருகிறது. அதை தடுக்கும் வகையில், மதமாற்றம் தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும். இவற்றை தங்களது தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறச் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிப்போம்.
அரசியல் கட்சிகள், ‘வேல்’ ஏந்த ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்து மத மறுமலர்ச்சி அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘விசுவ இந்து பரிஷத் – தமிழ்நாடு’ மாநிலத்தலைவர் ஆர்ஆர்.கோபால்ஜி கூறியதாவது:
தமிழகத்தில் இப்போதைய சூழலில் தீவிரவாதம் தலைதுாக்கிக் கொண்டிருக்கிறது. பலரை, என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில், அமைதியை சீர்குலைக்கும் வகையில், பிரச்னைகள் ஏற்படால் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஹிந்து ஓட்டு வங்கி உருவாகி வருகிறது. இந்தத் தேர்தலில் ஹிந்து விரோத சக்திகளுக்கு, ஹிந்து ஓட்டு வங்கியால் ஏற்படும் பாதிப்பை அனைவரும் பார்க்கப்போகிறோம். சில கட்சிகளுக்காக தேர்தல் பணி செய்யும் மார்க்கெட்டிங் ஏஜென்சி எடுத்த சர்வேக்களில், ‘ஹிந்துக்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் யார் பேசினாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தில் ஆன்மிக எழுச்சி, ஹிந்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது’ என தெரியவந்துள்ளது.
திராவிடக்கட்சிகள் வளர்த்த ஜாதி அரசியல் ஒழிந்து மக்களிடயே விழிப்புணர்வும், ஒற்றுமையும் ஏற்பட்டுள்ளது. இது நல்ல தொடக்கம். அதன் வெளிப்பாடாகத்தான் ஸ்டாலின்கூட கையில் வேல் ஏந்தத் தொடங்கியிருக்கிறார். அரசியல் கட்சித்தலைவர்கள் சிலர், திடீர் ‘வேலாயுதங்களாக’ மாறியிருக்கின்றனர்.
மதச்சார்பற்ற அரசு, அறநிலையத்துறை மூலம் கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது. அதன் மூலம் கிடைக்கும் பணத்தை இந்து சமுதாயத்துக்காகவும், இந்து சமுதாயத்தில் உள்ள ஏழை மக்களின் கல்வி, மருத்துவத்துக்காக பயன்படுத்துவதில்லை.
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் பல கோயில்களை கட்டி வைத்துள்ளனர். இவற்றில் பல பொக்கிஷங்களை காணவில்லை. அதை மீட்க வேண்டும்.
கண்காணிப்பாளராக இருந்து கோயில் சொத்துக்கள் திருடுப்போகாமல் அரசு பாதுகாக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தின் சொத்துக்களை மட்டும் அரசு நிர்வகிக்கக் கூடாது. அறநிலையத்துறையை விட்டு அரசு வெளியேற வேண்டும். தனித்து இயங்கும் வாரியம் அமைக்க வேண்டும். இந்து கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களுக்கு குத்தகைதாரர் சட்டம், கடைகளுக்கு வாடகைதாரர் ஒழுங்குமுறைச்சட்டம் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளித்து அது தொடர்பான வழக்குகளை சிறப்பு கோர்ட் அமைத்து விரைந்து முடிக்க வேண்டும்.
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி மானியம் வழங்கப்படுவதுபோல், ஏழை இந்து மாணவர்களுக்கும் மானியம் வழங்க வேண்டும். சைவ ஓட்டல்களில்கூட ஹலால் போர்டு வைக்க வேண்டும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம். ஹலால் போர்டுகளை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் தாமதமானது.
ஹிந்துக்களுக்கு பாதுகாப்பான கட்சி என்று எதுவுமில்லை. காங்கிரஸ், கம்யூ., கட்சிகளை ஒப்பிடுகையில், ஹிந்துகளுக்கு விரோதமாக பாஜ நடப்பதில்லை.
‘விஎச்பி – தமிழ்நாடு’அமைப்புக்குட்பட்டு கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவை, பூக்கட்டுவோர் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை ஆகியவை உள்ளன.
தமிழகத்தில் உள்ள 6 கோடியே 72 லட்சம் வாக்காளர்களில், இவர்கள் 15 சதவீதம் பேர். இயக்கத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு ஏற்ப ஹிந்துக்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளுக்குத்தான் இவர்கள் அனைவரும் ஓட்டளிப்பார்கள். ஹிந்து ஓட்டு வங்கியின் வலிமை அப்போது தெரியும்.
இவ்வாறு ஆர்ஆர். கோபால்ஜி கூறினார்.
DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.